சித்திரவதைகள் குறித்து இலங்கை விசாரிக்க வேண்டும் – ஐ.நா நிபுணர் குழு
சிறிலங்கா படையினர் மற்றும் காவல்து றையினரால், தடுப்புக்காவலில் வைக்கப்ப ட்டிருப்போர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவாவில் நேற்று வெளியிடப்பட்ட சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் இறுதி அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை வான்களில் ஆட்கள் கடத்தப்படுவது, தடுப்புக்காவல் மரணங்கள், மோசமான நிலையில் உள்ள தடுப்புக்காவல் மையங்கள், நீதிமன்றங்களில் குற்றங்களை ஒப்புக் கொள்ளுமாறு பலவந்தப்படுத்தல் போன்ற சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவில் குற்றவியல் விசாரணைகளில், சித்திரவதை செய்யப்படுவது பொதுவான ஒரு நடைமுறையாக இன்னமும் இருந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருகோணமலையில் 2066ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதே ஆண்டு மூதூரில் 17 தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம். உள்ளிட்ட முக்கியமான வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக நீதி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும், சரியான முறையில் விசாரணைகள் நடத்தப்படவோ, அந்த விசாரணைகள் முன்னோக்கிச் செல்லவோ இல்லை என்று, ஐ.நா நிபுணர் குழுவைச் சேர்ந்த, பீலிஸ் காயர் தெரிவித்தார்.