சிக்கியது ரூ.152 கோடி கருப்பு பணம்-சிக்கினர் தமிழக அமைச்சர்கள்
சென்னை: ஈரோடு மற்றும் பெங்களூருவில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் தமிழக அமைச்சர்களுக்கு நெருக்கமான கான்ட்ராக்டர்களிடம் இருந்து ரூ.152 கோடி ரொக்கம், சொத்து ஆவணங்கள், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் சொகுசு கார்கள் சிக்கின.
இதனால் விரைவில் அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பாசன நிறுவன மேலாண் இயக்குநர் சிக்கராயப்பா, கர்நாடக மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமை திட்ட அதிகாரி ஜெயச்சந்திரா ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஏராளமான பணம், தங்க கட்டிகள் சிக்கியது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஈரோட்டைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ராமலிங்கம் என்பவரது வீடு, பெங்களூருவில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டன.
ராமலிங்கம், ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில், ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் கம்பெனி என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான ராமலிங்கத்தின் மகன்களான சந்திரகாந்த், சூர்யகாந்த் ஆகியோரும் என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத தங்கம், வெள்ளி, சொத்து ஆவணங்கள், ரொக்கம் கைப்பற்றப்பட்டன. பெங்களூரு, ஈரோடு என 2 இடங்களிலும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மொத்தம் ரூ.152 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 16 கிலோ தங்கம், 2 சொகுசு கார்கள், ரூ.5.7 கோடி ரொக்கப்பணம் சிக்கியது. மேலும், தமிழகம், பெங்களூருவில் இந்த நிறுவனம் செய்துவரும் பணிகள், அதற்கு அதிகாரிகள் செய்த உதவிகள் குறித்த ஆவணங்களும் சிக்கியுள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் கருப்பு பண சோதனையில் இவ்வளவு பெரிய தொகை சிக்கியது இதுதான் முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ராமலிங்கம் 5 ஆண்டுகளில்தான் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இவர், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, கருப்பண்ணன் ஆகியோருக்கு நெருங்கிய உறவினர். மேலும், மேற்கு மண்டலத்தை சேர்ந்த தமிழக அமைச்சர்களின் பினாமியாக இவர் செயல்பட்டிருக்கலாம் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சென்னை தலைமைச் செயலகம் செல்லும் வழியில் அமைக்கப்பட்ட சட்டப்பேரவை வைரவிழா நுழைவு வாயில், காஞ்சிபுரம் மாவட்டம் மேல கோட்டையூரில் காவலர்களுக்கு கட்டியுள்ள வீடுகள் மற்றும் தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட ஏராளமான பணிகளை ராமலிங்கம்தான் செய்து வந்துள்ளார். குறிப்பாக மேற்கு மண்டல அமைச்சர்களும், மத்திய மண்டல அமைச்சர்களும் ராமலிங்கத்திற்குத்தான் அதிக கான்ட்ராக்ட் பணிகளை கொடுத்து வந்துள்ளனர் என்று வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பெங்களூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5.7 கோடியில், புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ரூ.4.75 கோடிக்கு இருந்துள்ளது. புதிய நோட்டு வெளியான 20 நாட்களில் எப்படி ஒரே நபருக்கு இவ்வளவு பணம் கிடைத்தது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் வரிசை எண் அடிப்படையில் ரிசர்வ் வங்கி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, இந்த பணம் ஈரோட்டில் உள்ள 4 தனியார் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது. ராமலிங்கத்தின் தலைமை அலுவலகம் ஈரோட்டில் இருப்பதால் ஈரோட்டில் உள்ள தனியார் வங்கிகளில் இருந்து பணம் மாற்றப்பட்டிருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் இதற்கு வங்கி அதிகாரிகள் உதவியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பெங்களூர் வருமான வரித்துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கணக்கில் வராமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், கமிஷன் அடிப்படையில் மாற்றப்பட்டதா அல்லது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும், கணக்கில் இருந்த பணத்தை எடுத்திருந்தால் ரூ.4.75 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் ஒரே நபருக்கு கொடுக்கப்பட்டது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள என்.ஆர். கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 2 நாள் தொடர் சோதனை நடத்திய பெங்களூர் வருமானவரித்துறை அதிகாரிகள் அப்போது எடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள் சிலவற்றை அலுவலகத்தில் உள்ள ஒரு தனி அறையில் வைத்து பூட்டி சீல் வைத்துள்ளனர். எனவே மீண்டும் சோதனை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ராமலிங்கத்துக்கும், தமிழக அமைச்சர்களுக்கும் உள்ள தொடர்பு, கருப்பு பணம் அமைச்சர்களுடையதா? என்பது குறித்தெல்லாம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடகில் ரூ.35 லட்சம் ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்: கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் சுண்டிகொப்பாவில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்களிடம் இருந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.35 லட்சத்து 46 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிக்கியது லஞ்சப்பணமா?
என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் 3 ஆயிரம் கி.மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணியை கர்நாடக அரசின் பொதுப்பணி துறை ஒப்படைத்துள்ளதாகவும், இந்த கான்ட்ராக்ட் கிடைக்க மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் ஜெயசந்திரா முழு முயற்சி செய்ததால், அவருக்கு கமிஷன் கொடுப்பதற்காக என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ராமலிங்கம் ரூ.5.7 கோடி பணம் கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் வருமானவரித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ராமலிங்கம் மற்றும் ஜெயசந்திரா ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே தமிழகத்தின் ஈரோட்டில் உள்ள நான்கு தனியார் வங்கிகளில் இருந்து பணம் அனுப்பியது தொடர்பாக நான்கு வங்கி அதிகாரிகள் நேரில் ஆஜராக வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. நேற்று அந்த நான்கு வங்கி அதிகாரிகளும் விசாரணைக்கு வரவில்லை என்று ஐடி வட்டாரம் மூலம் தெரியவருகிறது.
நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு
சமூக ஆர்வலர் சாய்தத்தா என்பவர் நேற்று கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில், கர்நாடக அதிகாரிகள் ₹152 கோடிக்கு சேர்த்த சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்தெந்த வழியில் ஊழல் செய்துள்ளார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்பட பலரை பிரதிவாதியாக சேர்த்துள்ளார்