Breaking News

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - 18 பேர் பலி

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவை இன்று தாக்கிய நிலநடுக்கத்துக்கு 18 பேர் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. 

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் பலவீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்கள் மரணபீதியில் ஓலமிட்டனர். 

பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் வாழும் நாடான இந்தோனேசியாவில் இன்று அதிகாலை தொழுகைக்காக பலர் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் தங்களது வீடுகளைவிட்டு வெளியில் ஓடி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

சுனாமி தாக்கலாம் என்ற அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல பலர் தயக்கம்காட்டி வருகின்றனர், 

அடுத்தடுத்து, ஐந்துமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் வீடுகள் மட்டுமின்றி, கடைகள், மசூதிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் மண்மேடாகிப் போனது. இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி மூழுவீச்சில் நடைபெறுகிறது. 

காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.