வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை –பாதுகாப்புச் செயலர்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இணையத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெளியிடப்படுகின்றன. இந்தச் செய்திகள் அனைத்தும் பொய்யானவை.
வடக்கு மாகாணத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செல்கிறேன். அங்குள்ள அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்.
வடக்கில் இடம்பெயர்ந்த 971 பேர் தமது குடும்பங்களுடன் இன்னமும் முகாம்களில் வாழ்கின்றனர்.அவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க சிறிலங்கா அதிபரும், பிரதமரும் உத்தரவிட்டுள்ளனர். இடமபெயர்ந்த தமிழ் குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. இது தான் வடக்கில் உள்ள நிலைமை.
வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளிலும் உண்மையில்லை. போரின் போது கைப்பற்றப்பட்ட தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கே இராணுவம் முயற்சிக்கிறது.
அனைத்துலக சமூகத்தை அமைதிப்படுத்துவதற்காக இதனை நாம் செய்யவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.