கடற்படையின் பெயரைக் கெடுக்க அரசாங்கம் முயற்சியா?
சிறிலங்கா கடற்படையின் பெயரைக் கெடுப்பதற்காகவே, அம்பாந்தோட்டை துறைமுகப் பணியாளர்களின் போராட்டத்தை குழப்புவதற்கு, கடற்படையை அரசாங்கம் அனுப்பியதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை, சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, மகிந்த ராஜபக்சவின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பாதுகாக்கவும், போராட்டக்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கப்பல்களை விடுவிக்கவுமே கடற்படை ஈடுபடுத்தப்பட்டது.
தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல்களை பாதுகாக்கும் உரிமை கடற்படைக்கு உள்ளது.
அந்த இரண்டு கப்பல்களுக்கு மாததிரமன்றி, துறைமுகத்தின் அருகில் இருந்த எண்ணெய்த் தாங்கிகளுக்கும் அச்சுறுத்தல் இருந்தது.
போராட்டக்காரர்கள் ஏற்கனவே, மின் பிறப்பாக்கிகள், இழுவைப் படகுகள், மரைன் படகுகள் உள்ளிட்ட துறைமுகச் சொத்துக்களை சேதமாக்கியிருந்தனர். இதனால், 15 மில்லியன் ரூபாவுக்கு மேல் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சோமாலியா போன்று சிறிலங்காவும் கடற்கொள்ளையரின் பாதுகாப்பிடமாக முத்திரை குத்தப்படுவதையா மகிந்த ராஜபக்ச விரும்புகிறார்?
போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள், சிறிலங்கா துறைமுக அதிகாரசபையினால் பணிக்கு அமர்த்தப்பட்டவர்களல்ல. முன்னைய ஆட்சிக்காலத்தில் மனிதவள நிறுவனம் ஒன்றின் ஊடாகவே இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்தப் பணியாளர்கள் மீது கரிசனை இருந்திருந்தால் முன்னைய ஆட்சியில், அவர்களை துறைமுக அதிகார சபையின் ஊடாக பணிக்கு அமர்த்தியிருக்கலாம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.