Breaking News

வடக்கு, கிழக்குக்கு தமிழ் காவல்துறை இணைப்பதிகாரிகள்



வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கும், சிறிலங்கா காவல்துறைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும், சிறிலங்கா அரசாங்கத்தின் நகர்வுகளின் ஒரு பகுதியாக, ஓய்வுபெற்ற மூன்று தமிழ்பேசும் மூத்த காவல்துறை அதிகாரிகள், இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.

சிறிலங்கா காவல்துறை ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்களான, கே.அரசரட்ணம், கணேசநாதன், செல்வராஜா ஆகியோர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும், காவல்துறை பயிற்சி மையத்துக்கும், இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.

தமிழ்ப் பேசும் மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.

காவல்நிலையங்களில் முறைப்பாடுகளைச் செய்யும் போது. தாம் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், ம்மால் விளங்கிக் கொள்ள முடியாத காவல்துறை அறிக்கைகளில் கையெழுத்திடுமாறு கோரப்படுவதாகவும், பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

வடக்கில் பணியில் உள்ள 15 ஆயிரம் காவல்துறையினரில், பெரும்பாலானவர்கள், தமிழ்பேச முடியாதவர்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கிழக்கு மாகாணத்துக்கான இணைப்பதிகாரியாக அரசரட்ணமும், வட மாகாணத்துக்கான இணைப்பதிகாரியாக, கணேசநாதனும், நீர்கொழும்பு காவல்துறை பயிற்சி மையத்துக்கான இணைப்பதிகாரியாக செல்வராஜாவும் நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் இரண்டு ஆண்டுகள் பணிக்கு அமர்த்தப்படுவர். அதன் பின்னர் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை இவர்களின் பணி நீடிக்கப்படும்.