வடக்கு மாகாண சபையை குப்பைத் தொட்டியில் வீசிய அமைச்சர்
தமிழ் இலக்கியத்தில் ஆகுபெயர் என்பது முக்கியமானது. ஆறு வகைமைப்பாட்டைக் கொண்ட இந்த ஆகுபெயர் என்ற விடயத்தை அறியாமல் விட்டால் மொழி வழு விளக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
யாழ்ப்பாணம் சிரித்தது என்பது இடவாகு பெயருக்கு ஒரு உதாரணம். யாழ்ப்பாணம் சிரித்தது என்றால் அது வழுவான எழுத்தமைப்பு என்று ஆகுபெயர் அறியாதோர் வாதிடுவர்.
உண்மையில் யாழ்ப்பாணம் சிரித்தது எனில் அதன்பொருள் யாழ்ப்பாண மக்கள் சிரித்தனர் என்பதுதான். எனவே ஆகுபெயர் என்ற இலக்கணப் பிரிவு மொழி விளக்கத்தில் முக்கியமானது.
இது ஒருபுறம் இருக்க; செயலிலும் ஆகுபெயர் உண்டென்பது நம் கருத்து. இதைச் சொல்லும்போது தமிழ்ப் புலமையுடையோர் நம்மீது கோபம் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
இருந்தும் ஆகு பெயர் போல ஆகு செயலும் உள்ளது என்பதுதான் நம் நிலைப்பாடு. அப்படியாயின் ஆகு செயல் என்றால் என்ன என்ற கேள்வி எழும். இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம் வருமாறு,
முன்பு இந்திய தேசத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் கலகம் ஏற்படுவது வழக்கம். அவ்வாறு கலகம் ஏற்படும்போது இந்துக்களைக் கோபம் கொள்ளச் செய்யும் பொருட்டு முஸ்லிம் மக்கள் பசு மாடுகளை அடித்துத் தாக்குவர். இவ்வாறு பசு மாடுகளை முஸ்லிம்கள் அடித்துத் துன்புறுத்துவதைப் பார்த்து இந்துக்கள் கடும் கோபமும் ஆத்திரமும் கவலையும் கொள்வர்.
தங்களுக்கு அடிக்கும் நோக்கில் பசுக்களை அடிக்கின்றனர் என்பதே இந்துக்களின் முடிவு. இது போல ஒருவரை தூற்றுவதற்கு பதிலாக அவரோடு சம்பந்தப்பட்ட மற்றவரைத் தூற்றுவதும் இத்தகைய தன்மையுடையது. இதனை ஆகு செயல் என்று கூறமுடியும் என்பது நம் முடிவு.
இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் கேட்டால் அதற்கு விளக்கம் கூறுவதும் நம் கடமை. வடமாகாணத்தில் சட்ட விரோதமாக பெளத்த விகாரைகள் அமைப்பதற்கு அனுமதிப்பதில்லை என்றொரு தீர்மானம் அண் மையில் வடக்கு மாகாண சபையில் எடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண அரசு தனது எல்லைக்குட்பட்ட அதிகாரங்களை பிரயோகிக்க முடியும். சட்டவிரோதமாக அமைக்கப்படும் பெளத்த விகாரைகளை அனுமதிப்பதில்லை என்பது நியாயமான சட்டத்துக்கு உடன்பாடான ஒரு விடயம்.
இருந்தும் வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய மேற்போந்த தீர்மானத்தை நீதியமைச்சர் விஜயதாச பாராளுமன்றத்தில் வைத்து வீசி எறிந்துவிட்டு இதைக் குப்பைத் தொட்டியில் போடுவதாக கூறியுள்ளார். இங்குதான் ஆகு பெயர் - ஆகு சொல் என்பது பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அதாவது சட்டவிரோதமாக பெளத்த விகாரைகளை வட மாகாணத்தில் அமைப்பதற்கு அனுமதிப் பதில்லை என்ற தீர்மானத்தை மத்திய அரசின் நீதி அமைச்சர் குப்பைத் தொட்டிக்குள் வீசுவாராயின் அதன் பொருள் வடக்கு மாகாண சபையை - வடக்கு மாகாண அரசை - வடக்கு மாகாண மக்களை குப்பைத் தொட்டிக்குள் வீசுவதாகவே பொருள்படும்.
இந்த நாட்டின் நீதி அமைச்சர் இவ்வாறு செய்கிறார் எனில் அதன் தார்ப்பரியம் எவ்வாறானது என்பதைப் புரிந்து கொள்வது கடினமன்று.
புத்த விகாரைகளை வட மாகாணத்தில் அமைக்க அனுமதிப்பதில்லை என்றால் கூட நீதி அமைச்சர் ஆத்திரமுற்றிருக்கலாம். ஆனால் சட்டவிரோதமாக புத்த விகாரைகளை அமைப்பதை அனுமதிப்பதில்லை என்று தீர்மானத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இருந்தும் இது கண்டு இந்த நாட்டின் நீதி அமைச்சர் கோபமுற்று பிரஸ்தாப தீர்மானத்தை குப்பைத் தொட்டிக்குள் வீசுகிறார் என்றால் சட்ட விரோதங்களை அனுமதிக்க முடியும். அனுமதிக்க வேண்டும் என்று நீதியமைச்சர் விரும்புகிறாரா என்பதே நம் கேள்வி.
எது எப்படியாயினும் வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் வைத்து குப்பைத் தொட்டிக்குள் நீதியமைச்சர் எறிவாராயின் வடக்கு மாகாண அரசுக்கான அதிகாரம் எந்தளவில் இருக்கிறது என்பது புரிகிறதல்லவா?
இதுதான் சொல்வது ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்றால் அந்தத் தீர்வு குப்பைத் தொட்டிக்குள் என்பதுதான்.
அட, எங்கள் தமிழ் அரசியல் தலைமை நீதியமைச்சரின் செயலுக்கு கைகொடுக்குமா? அல்லது பாராட்டு விழாவும் வைக்குமா? என்பதுதான் தெரியவில்லை.