Breaking News

அடுத்த ஜனாதிபதியாக மஹிந்த அல்ல கோத்தபாய



இலங்கையின் அடுத்த ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, அந்தத் தகுதி அவருக்கு மட்டுமே இருக்கின்றது கூடிய விரைவில் இது நிறைவேறும் என தம்மாலோக தேரர் உறுதி கூறினார்.

நேற்றைய தினம் யப்பானில் கோத்தபாய தலைமையில் ஓர் பௌத்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த நிகழ்வில் ஏராளமான பௌத்தர்களும் பிக்குகளும் கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே தம்மாலோக தேரர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

இப்போது பெளத்தத்திற்காக குரல் கொடுத்து அதனை பாதுகாத்து சிங்களவர்களை காப்பாற்றும் ஒருவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மட்டுமே.

பௌத்தத்தை காக்க பாடுபடுகின்ற ஒருவரும் சிங்கள இனத்தை பாதுகாக்கின்ற ஒருவருமே அடுத்த தலைவர் ஆக முடியும். அந்த வகையில் முழு சிங்களத்தையும் காத்துக் கொண்டு வரும் ஒருவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்.

முழுமையானதோர் சிங்களவராக பௌத்தனான வலம் வந்து கொண்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சாதாரண மனிதர் அல்ல சிங்களவர்களை காக்க பாடுபடும் மாமனிதர்.

இப்போது போலவே எதிர் காலத்திலும் சிங்களவரே எழுக பௌத்தனே எழுக என பௌத்தத்திற்காக நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்று நாம் முழுமையாக நம்புகின்றோம்.

அதன் படி எதிர்காலத்தில் ஜனாதிபதியாகக் கூடிய தகுதி கோத்தபாயவிற்கு மட்டுமே உண்டு. நிச்சயமாக அவர் இலங்கையில் ஜனாதிபதியாக கூடிய விரையில் பதவி ஏற்பார்.

அப்படி அவர் பதவி ஏற்கும் போது இலங்கையில் ஸ்ரீ மஹா போதியில் இருந்து ஓர் புத்தர் சிலையை யப்பானில் நிறுவவேண்டும் இதனை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்பது நிச்சயம்.

நீங்கள் ஜனாதிபதி ஆனவுடன் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவீர்கள் என்ற ஆவலுடன் நாம் காத்திருக்கின்றோம் எனவும் தம்மாலோக தேரர் தெரிவித்தார்.