இலங்கையில் வெளியாரின் தலையீடுகளுக்கு எதிராக சீனா கடும் நிலைப்பாடு
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளியாரின் தலையீடுகளுக்கு எதிராக, கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும், மனித உரிமைகளை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி, சிறிலங்காவின் பெயரைக் கெடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, சந்தித்த போது, சீனாவின் அரசவை உறுப்பினரும், சீன மகக்ள் குடியரசின் வெளிவிவகாரங்களுக்கான முன்னணி குழுவின் பொதுச்செயலருமான யாங் யீச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம், பீஜிங்கில் உள்ள டாவோயுடாய் அரச விருந்தினர் மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்சவை சீனாவின் உண்மையான நண்பன் என்று வர்ணித்துள்ள யாங் யீச்சி, சீனத் தலைநகரில் அவரை வரவேற்பதையிட்டு மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.