Breaking News

வடக்கு மாகாண சபையில் அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றுக

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது மிகவும் அவசியமானது. இந்த நாட்டில் சிங்கள மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் இனப் பிரச்சினைக்கான தீர்வு அவசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்ப ட்டுள்ளது. 

ஒரு காலத்தில் தமிழ் மக்கள் தொடர்பில் சிங்கள மக்களும் முரண்பாடான போக்கைக் கொண்டிருந்தமை உண்மையாயினும் இப்போது அந்நிலைமை இல்லை என்று அடித்துக்கூற முடியும்.

தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள மக்களில் கணிசமானவர்கள் உடன்பாடான கருத்தைக் கொண்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. 

அதேநேரம் தமிழ் மக்களுக்கு உரிமை வழங்குவதை சிங்கள மக்கள் விரும்பவில்லை என்பது போன்ற ஒரு காட்டாப்பை தென்பகுதி அரசியல்வாதிகளில் சிலரும் பெளத்த பிக்குகள் சிலரும் ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் உண்மை அதுவன்று. 

இன்றைய சமகால சூழ்நிலையில் சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் அமைதியை, சமாதானத்தை விரும்புகின்றனர். நடந்து முடிந்த யுத்தத்தால் ஏற்பட்ட மனித உயிரிழப்புக்கள் தொடர்பில் அவர்களிடம் நிறைந்த கவ லையுண்டு.

எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என விசுவாசமாக நினைக்கின்ற சிங்கள மக்களுடன் தமிழ் மக்களினதும் தமிழ் அரசியல் தரப்புக்களினதும் உறவு பலப்பட வேண்டும்.

இத்தகைய உறவுப் பலம் உரிமைகள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்ற உணர்வை பெரும்பான்மை இன மக்களிடம் நிச்சயம் ஏற்படுத்தும். 

இதற்கு சிறிது காலம் தேவைப்படலாமாயினும் அதற்கான ஏதுநிலைகள் இப்போதே ஆரம்பிக்கப்பட வேண்டும். தவிர இலங்கையின் அமைதி என்பது தனித்து அரசியலமைப்புகளாகவோ அன்றி இனப் பிரச்சினைக்கான தீர்வுகளாலோ மட்டும் ஏற்பட்டு விட முடியாது.

மாறாக பல்லின மக்களிடையேயான நல்லுறவு, ஒற்றுமை, சிநேகபூர்வம் என்பனவும் அவசியமாகும். அதிகாரங்களும் அரசியலமைப்புகளும் சட்டப் புத்தகப் பதிவுகளேயன்றி அவற்றின் அமுலாக்கம் என்பதில் மனிதர்களே இயக்கிகள். எனவேதான் இன ஒற்றுமை அவசியம்.

இந்த ஒற்றுமைக்கு பேரினவாதிகள் அரசியல் வாதிகளும் மதவெறியர்களும் ஒருபோதும் விடப் போவதில்லை. அதேநேரம் இத்தகையவர்களைக் குறைகூறுவதாலும் ஏதும் நடந்துவிடமாட்டாது.

எனவே இத்தகைய பேரினவாதிகளையும் மத வெறியர்களையும் செயலற்றவர்களாக ஆக்குவதற்கு இன ஒற்றுமையை விரும்புகின்ற சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் தமது உறவைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான அடிப்படைகளை செய்வது கட்டாயமானதாகும்.

இவ்வகையில் அண்மையில் சாவகச்சேரிப் பகுதியில் நடந்த மிகக் கொடூரமான விபத்தில் பதினொரு சிங்கள மக்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ் மக்களை உலுப்பியது.

இக்கோர விபத்து அறிந்து அழாத தமிழ் உள்ளங்கள் இல்லை எனலாம். இந்த இரக்க குணம் உலகில் எங்கும் கிடையாது என்று சொல்வதில் ஒவ்வொரு தமிழ் மகனும் பெருமையடைய முடியும்.

எனவே சாவகச்சேரியில் நடந்த கோர விபத்தில் தென்பகுதியைச் சேர்ந்த பதினொரு பேர் இறந்த போது தமிழ் மக்கள் பட்ட வேதனையை எங்களுக்குள் மட்டும் வைத்திராமல் அதனை வெளிப்படுத்த வேண்டும். இந்த வெளிப்படுத்தல் தமிழ் மக்களிடம் இருக்கக் கூடிய உன்னதமான மனித நேயத்தை வெளி உலகுக்கு வெளிப்படுத்தும்.

ஆகையால் சாவகச்சேரிப் பகுதியில் நடந்த கோர விபத்தில் பலியான நம் சிங்களச் சகோதரர்கள் பதி னொரு பேருக்கும் வடக்கு மாகாண சபையில் இரு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவதுடன் அவர்களின் இறப்புக்கு அனுதாபத் தீர்மானமும் நிறைவேற்ற வேண்டும்.

இதை வடக்கு மாகாண சபை நிச்சயம் செய்யும் என்பதற்கப்பால் இச்செய்கை தென்பகுதியில் மிகப் பெரிய மாற்றங்களையும் கொண்டு வரும் என்பது நம் தாழ்மையான கருத்து.