Breaking News

சர்வதேச சட்டங்கள் சக்தியற்றதாக்கப்பட்டன

“இலங்கையில், தமிழ் இனத்தின் மனித உரிமைகள், மனிதத்தை ஏற்க மறுக்கும் இனவாத சக்திகளினால் மறுக்கப்பட்ட போது, எம்மக்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டது. சர்வதேச சட்டங்கள் இருந்தும் அவை இங்கு சக்தியற்றதாக்கப்பட்டன” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு தெரிவித்து, ஞாயிற்றுக்கிழமை அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

“தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறை, மொழிப்பயன்பாட்டில் இரண்டாம் தரப்பிரஜைகளாக்கல், கல்வியில் ஓரங்கட்டுதல், அரச நியமனங்களில் பாகுபாடு, எனத் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பக்கச் சார்பான நடவடிக்கைகளுக்கு எதிராக வீறுகொண்டெழுந்த இளைஞர் அணிகளினால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையே ஆயுத கலாசாரமாக விரிவடைந்து, இந்நாட்டின் பாரிய இனக் கலவரங்களுக்கும் அநியாய உயிரிழப்புக்களுக்கும் சொத்து அழிப்புக்களுக்கும் காரணிகளாக அமைந்தன" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.