Breaking News

புலிகளின் அழிவிற்கு பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னரான காலத்தில் தமிழர் தாயகப் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.


பெண்கள் வன்முறைகள் தொடர்பில் நீதித்துறையில் காணப்படும் இழுத்தடிப்புக்களால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட உதவியை பெற முன்வருவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறையற்ற மகிழ்வான குடும்பம் எனும் தொனிப்பொருளில் குடும்பத்தில்

சமத்துவம், சமாதானம் பேணி சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்திடும் 16 நாள் ஜசாக்கின் செயற்திட்டம் நேற்றைய தினம் நாவலர்கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், பெண்களுக்கு எதிரான வன்முறை தற்போது அதிகரித்து காணப்படுகிறது. அது வீட்டு வன்முறையாக அல்லது சமூக வன்முறையாக காணப்படுகின்றது. இந்த வன்முறைகள் ஊடாக பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை.

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் நீதித்துறையின் இழுத்தடிப்புக்களால் அந்த வன்முறைகளை எதிர்த்து போராட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவிற்கு பின்னர் இந்த வன்முறைகள் மோசமாக அதிகரித்துள்ளது.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் தோல்வி அனைத்து இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒன்று தான் இந்த பெண்கள் மீதான வன்முறையும் காணப்படுகின்றது. பாலியல் சமத்துவம் பற்றி சிறு வயதிலிருந்தே கொண்டுவரப்பட வேண்டும்.

ஆண்கள் என்றால் முதன்மையானவர்கள் என்றும் பெண்கள் என்றால் இரண்டாம் தரமானவர்கள் எனவும் சிறுபராயத்திலேயே அறிமுப்படுத்தப்படுகின்றது.

பெண்களுக்கு ஒழுக்கம் கலாசாரம் என்பவற்றை போதிக்கும் பெற்றோர் அதனை ஆண்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

வீதிகளில் செல்லும் பெண்கள் கூட தற்போது சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஒன்று உருவாகி வருகின்றது. வயது வேறுபாடுன்றியே இந்த சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றாலும் அங்கு பணபலம் அரசியல் செல்வாக்கு கொண்டவர்கள் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.

இந்த பாரபட்ச நிலை மாற்றப்படுவதன் மூலமே பெண்கள் தமக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளுக்கு சட்ட உதவியொன்றை பெறுவதற்கு முன்வருவார்கள்.

சமூக ரீதியாக பெண்கள் முன்னுக்கு வர வேண்டும். இதன் மூலமே பெண்சமத்துவத்தை நடைமுறையில் ஏற்படுத்த முடியும்.

வெறுமனே பெண் சமத்துவம் என பேசிக்கொண்டு இருப்பதால் ஒன்றும் நடைபெற போவதில்லை. பெண்கள் வன்முறைகள் தொடர்பில் கையாள்வதற்கு நீதித்துறையிலும் பல மாற்றங்களும் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.