இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் : ஜனாதிபதிக்கு அறிக்கை
வடமாகாணத்தில் இராணுவத்தினர் வசமிருக்கும் காணிகள் மற்றும் எல்லைப்பகுதிகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் படையினர் வசமிருக்கும் பொது மக்களின் காணிகள் தொடர்பில் உண்மையான தகவல்கள் ஜனாதிபதியை சென்றடையாமையினால் அது குறித்த பூரண அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்குமிடையில் கடந்த மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது முல்லைத்தீவு எல்லை கிராமங்கள், கேப்பாபிலவு, மற்றும் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி ஆகிய பிரதேசங்களிலுள்ள காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்தியதாக தெரிவித்த முதலமைச்சர், குறித்த காணிகள் தொடர்பில் முழுமையான அறிக்கையினை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார்.
அதேவேளை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாமல் உள்ளதை ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளதாகவும், மேலதிக நிதியை எதிர்பார்த்துள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
வடமாகாண சபை கோரிய தொகையில் 3 இல் ஒரு பகுதியே வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிதியில் 3 ல் ஒரு பங்கே எமது கைகளில் கிடைத்திருக்கின்றது.
2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் 1500 மில்லியன் ரூபாவை அண்மித்தாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் 2016 ஆம் ஆண்டு 3600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ள போதிலும் 900 மில்லியன் ரூபாவே கிடைத்ததாக குறிப்பிட்டார்.
அதேவேளை இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து பெற்றிருக்கும் கடன்களுக்கான வட்டி இந்த நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாகும்.
அந்த கடன்களை மீள செலுத்துவதற்கு 2028 ஆம் 2030 ஆம் ஆண்டு வரை செல்லும் எனவும் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.