அரசியலமைப்பு மாற்றம் குறித்து மகிந்தவுடன் ரணில், சம்பந்தன் பேச்சு
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர், நேற்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா பிரதமர் செயலகத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன. இதன்போது, அரசியலமைப்பு மாற்றத்துக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் ஆதரவைப் பெறுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் முதலில் தமது திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டார்.
அரசாங்கத்தின் மனதில் என்ன உள்ளது என்று தெரியாமல், எவ்வாறு தமது கருத்தை முன்வைப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது நிலைப்பாட்டை இன்னமும் வெளிப்படுத்தவில்லை என்று சிறிலங்கா பிரதமர் கூறியுள்ளார்.
அப்போது மகிந்த ராஜபக்ச, அரசாங்கத்தின் முக்கியமான பங்காளிக் கட்சி இவ்வாறு செயற்பட்டால், தாம் எவ்வாறு கருத்து வெளியிட முடியும் என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதன்போது, அரசியலமைப்பு மாற்றங்களுக்கு கூட்டு எதிரணி அதரவு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சந்திப்பில், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினேஸ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, விதுர விக்கிரமநாயக்க, செஹான் சமரசிங்க, லொகான் ரத்வத்த ஆகியோர் மகிந்த ராஜபக்ச தலைமையில் பங்கேற்றனர்.