'இறுதி யுத்தத்துக்கு சம்பந்தன் பச்சைக்கொடி'
"இன்றைய எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பியுமான இரா. சம்பந்தன், மாவிலாறு யுத்தத்தை ஆரம்பித்த போது, அதற்குப் பச்சைக்கொடி காட்டினார்" என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"மாவிலாறு யுத்தத்தை ஆரம்பித்ததன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சம்பந்தனை, நாடாளுமன்ற கலரியில் வைத்து, நான் சந்தித்தேன். அவர் சந்தோஷப்பட்டார். யுத்தத்தை ஆரம்பித்துவிட்டீர்கள். ஆகையால், தமிழீழத்தை விரைவில் பெற்றுவிடுவோம்" என்றும் கூறினார்.
இதேவேளை, "2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, வடக்கு மக்களை வாக்களிக்கவிடாது விடுதலைப் புலிகள் தடுத்தனர். அதாவது, மஹிந்த ராஜபக்ஷ, யுத்த மனநிலையை கொண்டவர். ஆகையால், அவரை வெற்றியடைச்செய்ய வேண்டும் அப்போதுதான், யுத்தத்துக்கு வருவார். யுத்தத்தில் ஈழத்தை பெற்றுவிடலாம் என்ற நோக்கிலேயே அன்று வாக்களிக்கவிடாமல் தடுத்தனர்" என்றார்.