Breaking News

அதிகாரப் பகிர்வுக்கு முட்டுக்கட்டை போடும் அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்கர்கள்



புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, சிறிலங்காவின் இறைமை, தேசிய பாதுகாப்பு, உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை கண்டியில் அஸ்கிரி மற்றும் மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது, அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களினால் தனித்தனியாக இரண்டு கடிதங்கள் சிறிலங்கா பிரதமரிடம் கையளிக்கப்பட்டன.

அந்தக் கடிதங்களில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான தமது கருத்துக்களையும், நாட்டின் இறைமை மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்கள் குறித்த எதிர்பார்ப்புகளையும், மகாநாயக்கர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய கொள்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்க வேண்டும் என்று மல்வத்த மகாநாயக்கர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இறைமையை மீறும் வகையில் சில உப குழுக்களால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்த யோசனைகள் குறித்து பரவும் வதந்திகள் குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காடுகளை அழித்து குடியேற்றங்களை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என்றும், வடக்கு, கிழக்கில் பௌத்த வழிபாட்டு இடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மல்வத்தை பீட மகாநாயக்கர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய, 13ஆவது திருத்தச்சட்டத்தின் சில பகுதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வலியுறுத்தியுள்ளார்.

மாகாணங்களுக்கு அதிகாரங்களை அளிப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்றும், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.