புதிய யாப்பு தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாடு
புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவே நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்தானது வரவேற்கத்தக்கது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
அதேவேளை, புதிய அரசமைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சில கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதிகாரப் பகிர்வு மற்றும் ஆளுநர்களுக்கான அதிகாரக் குறைப்பு உள்ளிட்ட விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் பிமல் ரத்னாயக்கவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், “புதிய அரசமைப்பு தொடர்பில் கூட்டமைப்பு பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது. எனினும், இவை அரசியல் மேடைகளில் தெரிவிக்கப்படும் கருத்தே ஒழிய, இவை குறித்து அரசமைப்பு பேரவையிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.
அத்தோடு, மறுபுறத்தில் வடக்கு முதல்வாரன சி.வி.விக்னேஸ்வரன் சமஷ்டி தான் வேண்டும் என்று கூறிவருகிறார். ஆனால், சமஷ்டி வேண்டும் என்று சம்பந்தனோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. அதிகாரப் பகிர்வு என்பது அரசமைப்பின் ஊடாக பகிரப்படுமே ஒழிய, வெறும் பேச்சுக்களால் அதனை பெற்றுவிட முடியாது.
எவ்வாறாயினும், புதிய அரசமைப்பானது சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவே நிறைவேற்றப்படும் என்று சம்பந்தன் கூறியுள்ள விடயத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதுவே சிறந்த ஜனநாயம்“ என்றார்.