பௌத்தர்களுக்கும் அச்சுறுத்தலாம்: ரணில்
ஸ்ரீலங்காவில் கடந்த ஆட்சிக்காலத்தில் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமன்றி பௌத்தர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் வாழும் சிங்கள பௌத்த மக்களின் அதி உயர்மதபீடமான சியாம் நிக்காயவின் ஒரு பிரிவான மல்வது பீடத்தை இரண்டாக பிளவுபடுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்காபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் பெருமானின் ஜன்ம தினமான மீலாதுன் நபிகள் தினத்தில் பண்டாரவளை குருதலாவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்தத் தகவல்களை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தேவைகளுக்கு ஏற்ப செயற்படாவிட்டால் மல்வது பீடத்தை இரண்டாக பிளவுபடுததுவதாக மல்வது பீட மகாநாயக்கரை கடந்த ஆட்சியினர் எச்சரித்திருந்ததாக குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர், மல்வது பீட மகாநாயக்கத் தேரரை எச்சரித்தவர்களே இன்று இனவாதத்தை தூண்டி வருவதாகவும் குற்றம்சாட்டினால்.
இதனால் கடந்த காலங்களில் நிகழ்ந்த அச்சுறுத்தல்கள் மீண்டும் தலைதூக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறினார்.
அதேவேளை கடந்த காலங்களில் மல்வது பீட மகாநாயக்கத் தேரருக்கு செவிமடுக்காத தரப்பினரே இன்று பௌத்த மதத்தின் பாதுகாப்பு குறித்து பேசிவருவதுடன் அதனை அடிப்படையாக இனவாதத்தையும் பரப்பி வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இனவாதத்தை பரப்பி வருவதாக கவலைவெளியிட்ட பிரதமர் பிரதான ஊடகங்கள் இனவாதத்ரத பரப்புவதை சட்டத்தைக் கொண்டு தடுக்க முடிந்த போதிலும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை அவ்வாறு தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவற்றுக்கு புதிய சட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பிரதமர் அவ்வாறன தேவை ஏற்படுமாயின் அதனை தாம் செய்வதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.