Breaking News

பரபரப்பான சூழலில் கூடவுள்ளது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 2017 ஜனவரி 06ஆம் நாள் பிற்பகல் 4.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், செயலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்குபற்றுவர்.

கூட்டமைப்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை மாதம் தோறும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், சில மாதங்களாக இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் தற்போதைய அவசர சூழலில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ் பொதுச்செயலர் சிவசக்தி அனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியிருந்தார்.

இதனடிப்படையிலேயே இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்துள்ள வாக்குறுதியின் நிலை, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகள் குறித்து காரசாரமான விவாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்காத அரசியலமைப்பு ஒன்றே முன்வைக்கப்படும் சூழல் எழுந்தால், புதிய அரசியலமைப்புக்கான வழிகாட்டல் குழுவில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் விலகிக் கொள்ள வேண்டும் என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது