சீனாவுக்கு எதிராக நாமல் தலைமையில் ஆர்ப்பாட்டம்
அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.
கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கு சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை அம்பாந்தோட்டையில் வழங்கும் திட்டத்துக்கு எதிராகவே கடந்த சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடந்த சனிக்கிழமை காலையில் சீனத் திட்டங்களுக்கு எதிராக ஜேவிபி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.
இதன்போது, ராஜபக்சக்கள் கூட அம்பாந்தோட்டை காணிகளை சீனாவுக்கு வழங்கத் திட்டமிட்டிருந்தனர் என்றும், கடந்த அதிபர் தேர்தலுக்குள் அவர்களால் அதனைச் செய்ய முடியாது போனதாகவும் ஜேவிபியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதனையடுத்தே நாமல் ராஜபக்ச தலைமையில் மற்றொரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஏற்கனவே 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
எனினும், முதல் முறையாக சீனாவின் திட்டத்துக்கு எதிராக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பகிரங்கமாக போராட்டத்தில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.