Breaking News

ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து எதிரிகள் விடுதலையானது எப்படி?

சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என்று, சிங்கள ஜூரிகள் சபை தெரிவித்துள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், 2006ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 10ஆம் நாள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பத்தாண்டுகளுக்குப் பின்னர் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மூன்று சிறிலங்கா கடற்படையினர் உள்ளிட்ட ஐந்து பேரும் நேற்று, சிங்கள ஜூரிகள் சபையின் ஒருமனதாக முடிவின் அடிப்படையில், கொழும்பு மேல்நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் பல சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என்று, ஜூரிகள் முடிவு செய்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எதிரிகளும் விடுவிக்கப்பட்டனர்.

ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் முதல் பிரதிவாதியான பழனிசாமி சுரேஷ் அல்லது சாமி இறந்து விட்டதாக வழக்கின் ஆரம்பத்திலேயே சாட்சிகளை விசாரணை செய்து நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, சிறிலங்கா  கடற்படையைச் சேர்ந்த  லெப். கொமாண்டர் ஹெற்றியாராச்சி முதியன்சலாகே பிரசாத் சந்தனகுமார அல்லது சம்பத், கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்த தெகிவலகெதர காமினி செனவிரட்ண, கங்கானம் லாகே பிரதிப் சாமிந்த அல்லது வஜிர, கருணா குழுவின் சிவகாந்தன் விவேகானந்தன் அல்லது சரண் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் காவலர் பெபியன் ரொய்ஷ்டன் டூசேன் ஆகியோரே இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இவர்களில் மூன்று கடற்படை அதிகாரிகளே மன்றில் முன்னிலையாகியிருந்தனர். கருணா குழுவைச் சேர்ந்த சரண், சுவிசில் தஞ்சமடைந்திருப்பதாகவும், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெபியன் ரொய்ஷ்டன் டூசேன் அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, குமாரபுரம் படுகொலை வழக்கிலும், 26 தமிழர்களைப் படுகொலை செய்த இராணுவத்தினர், சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும், அவர்கள் அனைவரும் ஜூரிகள் சபையினால் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.