தனியார் பஸ் பணிப்புறக்கணிப்பு ; பயணிகள் பெரும் அசௌகரியம்
நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பணிப்புறக்கணிப்பினால் கொழும்பு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வாகன சாரதிகளுக்கும் வாகனங்களுக்குமான தண்டப்பணம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையை நீக்குமாறு கோரியே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் தனியார் பஸ் உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பினால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, தனியார் பஸ் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பினால் மலையக பஸ் சேவைகளுக்கு பாதிப்பில்லையென ஹட்டன் டிப்போவின் பரிசோதகர் தெரிவித்தார்.
பஸ் பணிப்புறக்கணிப்பிற்கு முகம் கொடுப்பதற்காக 88 புதிய பஸ்கள் பிரதான பாதையிலும், குறுக்கு வீதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.