தமிழ்நாட்டை மிரட்டும் நடா புயல் – யாழ். குடாநாடு தப்புமா?
வங்கக் கடலில் உருவாகியுள்ள நடா எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு சற்று வடக்காக, வடமேற்குத் திசையில் கடந்து செல்லும் என்று வானிலை ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முல்லைத்தீவுக்கு கிழக்காக 400 கி.மீ தொலைவில் நடா புயல் மையம் கொண்டிருந்தது. இது வடமேற்குத் திசையில் நகர்ந்து வருகிறது.
இந்தப் புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை தமிழ்நாட்டில் கரைகடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புயல் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு சற்று மேலாக, இலங்கையைக் கடந்து செல்லும் போது, வடக்கிலுள்ள மாவட்டங்களில் கடும் மழையும், 70 தொடக்கம் 80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் தொடக்கம் திருகோணமலை வரையான கடல் பகுதியில், 3 மீற்றர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தப் புயலினால், யாழ்ப்பாணக் குடாநாட்டில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருந்தாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்று வானியை ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நேற்றிரவு தொடக்கம், யாழ். குடாநாட்டில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
அதேவேளை, நடா புயல், தமிழ் நாட்டின் கடலூர் அருகே கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்தயாரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐந்து மாவட்டங்களில் இன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் நாள் சென்னையில் வெள்ளத்தினால் பாரிய அழிவுகள் ஏற்பட்டு சரியாக ஒரு ஆண்டு கழித்து நடா புயல் தமிழ்நாட்டில் மக்களை அச்சுறுத்தி வருகிறது.