துக்ளக் ஆசிரியர் ‘சோ’ காலமானார்
தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் துக்ளக் இதழின் ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகரும், நடிகருமான சோ என்று அழைக்கப்படும் சோ.ராமசாமி (வயது-82) இன்று அதிகாலை காலமானார்.
உடல்நலக் குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோ, இன்று அதிகாலை 3.30 மணியளவில் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துக்ளக் இதழில் காரசாரமான அரசியல் விமர்சனங்களை முன்வைத்து புகழ்பெற்ற சோ, தமிழ் சினிமா துறையிலும், தனது நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிப்பினால் பிரபலமானவர்.
அரசியலை காரசாரமாகவும், ரசிக்கும் வகையிலும் விமர்சிக்கும் புதிய பாணியை துக்ளக் இதழில் சோ ஆரம்பித்து வைத்திருந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும், அவரது அரசியல் ஆலோசகராகவும் சோ திகழ்ந்தார். ஜெயலலிதாவின் மரணம் நிகழ்ந்து இரண்டாவது நாளில் சோவின் மரணமும் இடம்பெற்றிருக்கிறது.
ஈழத் தமிழரின் போராட்டம் தொடர்பாக முரண்நிலைக் கருத்துக்களையே சோ வெளிப்படுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.