முன்னாள் போராளிகளை ஒதுக்காதீர்கள்..!
தாய் மண்ணின் விடிவுக்காகவும், தமிழ் இனத்தின் விடுதலைக்காகவும் தம்மை அா்ப்பணித்த பலா் இன்று சமூகத்தினால் ஒதுக்கப்பட்டு மறைந்து வாழ்ந்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா கவலை வெளியிட்டுள்ளார்.
சமூகத்தினால் ஒதுக்கப்பட்டு, மறைந்து வாழும் இந்த முன்னாள் போராளிகளுக்கு அன்று எவ்வாறு மதிப்பு அழிக்கப்பட்டதோ அதனைவிட மேலான மதிப்பு தற்போதும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோா் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றுவலுவுள்ளோா் கௌரவிப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மாற்று வலுவுள்ளோா் சங்கத்தின் தலைவா் ஆ.நேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் மாற்று வலுவுள்ளோா் சங்கத்தின் அங்கத்தவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராசா மாற்று வலுவுடையவர்கள் தொடர்பில் மக்களின் மனநிலை மாற்றம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் யுத்தத்தில் அங்கவீனமான இராணுவத்திற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளும் விசேட சலுகைகளும் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால் வடக்கில் யுத்தத்தால் அங்கவீனமானவா்களுக்கு எந்தவொரு விசேட திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் மண்ணின் விடிவுக்காக தமிழ் இனத்தின் விடுதலைக்காக தம்மை அா்ப்பணித்த பலா் இன்று கையை இழந்து காலை இழந்து இடுப்பை இழந்து பல்வேறு பட்டப் பெயா்களுடன் மறைந்து வாழ்கின்றாா்கள்.
இவா்கள் தொடா்பான சமூகத்தின் மனநிலை மாறவேண்டும் எனத் தெரிவித்த அவர், அன்று அவா்களுக்கு எவ்வாறு மதிப்பு அழிக்கப்பட்டதோ அதனைவிட மேலான மதிப்பு தற்போதும் கொடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.
மாற்று வலுவுள்ளோருக்கு ஏற்ற வகையில் திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மாற்றுவலுவுடைய பிள்ளைகளை புலிகளாக தொடா்ந்தும் பார்க்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நல்லாட்சி என்று தெரிவிக்கும் மைத்திரி ரணில் அரசாங்கம் தெற்கில் உள்ளவா்களுக்கு வழங்கின்ற விசேட சலுகைள் போன்று வடக்கிலுள்ள மாற்று வலுவுள்ளவர்களுக்கும் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளாா்.