வடக்கு கிழக்கு இணைப்பு; கூட்டமைப்பின் கருத்துக்கள் குறித்து அதிருப்தி
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் முன்னாள் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரமேச்சந்திரன்,
சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் கருத்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
சமஷ்டி என்பது இல்லை, ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு போன்ற அடிப்படை விடயங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே எந்த அடிப்படையில் சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்றக்குழு தொடர்ச்சியாக அரசியல் சாசனப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகின்றது என்பதை அவர்கள் தமிழ் மக்களுக்கு தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெரும்பான்மை இனத்தவர்கள் கூறுவதை ஏற்று, ஒரு தீர்வுத் திட்டம் வருமானால் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமான தீர்வாக இருக்குமா என்றொரு கேள்வியும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் தமது விடுதலைக்காகப் போராடியவர்களுக்குத் தான் உரிமை தொடர்பாகவும் அதனுடைய வலிகள் தொடர்பாகவும் தெரியும் என்பது அல்ல. எமது உரிமைகளுக்காக எத்தனை இலட்சம் மக்களை இழந்திருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.