Breaking News

மகசீன் சிறையில் அரசியல் கைதி திடீர் மரணம்



பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் திடீரென உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் 70 வயதான குணரத்ன கஜவீர உயிரிழந்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற காலி துறைமுக தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குணரத்ன கஜவீர கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குணரத்ன கஜவீரவின் 63 வயதான மனைவி வைரமுத்து சரோஜாதேவியும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு குணரத்ன கஜவீரவின் 44 வயதான பந்துல கஜவீர என்ற மகனும், குணரத்ன கஜவீரவின் 45 வயதான மருமகன் அஜித் நிஜாந்த எதிரிசிங்க ஆகியோரும் குறித்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கொழும்பு - மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் குணரத்ன கஜவீரவின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.