ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தை விடுவிக்க தயார்- - வன்னி இராணுவ தளபதி
ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் அறிவித்தல் விடுத்தால் வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தை விடுவிக்கத் தயாரென வன்னி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தெரிவித்துள்ளார்.
வன்னி இராணுவ கட்டளை தளபதியுடன் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் நேற்று (புதன்கிழமை) சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்
இதன்போது, வவுனியாவில் காணப்படும் ஒரே துயிலும் இல்லமான ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தை விடுவிக்குமாறு விடுத்த கோரிக்கையை அடுத்து, வன்னி இராணுவ கட்டளை தளபதி மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
மக்களின் உணர்வை தம்மால் புரிந்துகொள்ள முடியுமென குறிப்பிட்டுள்ள இராணுவ கட்டளைத் தளபதி, உரியவர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் தம்மிடமிருந்து சாதகமான பதில் கிடைக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் தற்போது இராணுவத்தின் 611ஆவது படைத் தலைமையகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.