முழங்காவில் துயிலுமில்லம் பற்றி ஒரு தாயின் உளப் பகிர்வு…!
இறுதி யுத்தத்தில் எனது மகன் இறந்தபோது அவனது முகத்தைக்கூட பார்க்க முடியாத நிலையில் மிகவும் கனத்த இதயத்தோடு தவித்த எனக்கு இன்றைய தினம் அவனது படத்தை வைத்து அவனது உறவுகளுடன் கூடி அஞ்சலித்தமை மனதிற்கு ஓர் திருப்தியாகவுள்ளதாக ந.அற்புதாம்பாள் என்னும் மூதாட்டி தெரிவித்தார்.
மாவீரர் தினத்தினை முன்னிட்டு நேற்று முன்தினம் முழங்காவில் துயலுமில்லத்தில் விளக்கேற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூதாட்டியே இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,
இறுதி யுத்தத்தில் நான் வவுனியாவில் இருந்தேன் எனது மகன்கள் வன்னியில் இருந்தனர். இதன்போதே ஒரு மகன் வன்னியில் இறந்தபோது அவனது முகத்தைக்கூட பார்க்க முடியவில்லை. அவன் இறந்த செய்தி மட்டுமே எனக்கு கிடைத்தது. இந்த நிலையில் எனது கணவரும் இறந்தார். இவற்றினால் மிகவும் கனத்த இதயத்தோடு தவித்த எனக்கு போராளிகளாக இருந்து மரணித்த மாவீர்ர்களிற்கு செய்யும் பல தினங்களை பார்த்தமையினால் அவனது இறுதி ஆசையின் பிரகாரம் எனது மகனுக்கும் செய்யவேண்டும் அதுவும் நான் உயிரோடு இருக்கும்போதே இது நடக்குமா ? இராணுவ அடக்குமுறையுடன் அனைத்து துயிலுமில்லமும் இடித்தழிக்கப்பட்ட நிலையில் எனது பிள்ளையை எண்ணி மனம் வெதும்புவேன்.
இந்நிலையிலேயே எனது மற்றுமோர் மகன் காலையில் தெரிவித்தார் இன்று துயிலுமில்லத்திற்குப் போகலாம் புறப்படுமாறு தினம் அழுது புலம்பும் எனக்கு வழமையாக கூறும் பொய் என்றே முதலில் எண்ணினேன். இருப்பினும் பலர் வருவதாக கூறவே நானும் இந்த வயதிலும் புறப்பட்டேன். இங்கு வந்தபோது கூழுமி நின்ற உறவுகளை பார்க்க என்னால் நம்ப முடியிவில்லை.
இருப்பினும் இந்த முழங்காவில் துயலுமில்லத்தில் இன்றைய தினம் அவனைப் புதைக்காது விட்டாலும. அவனைப்போல உள்ளவர்கள் இடத்தில் மகனின் படத்தை வைத்து அவனது உறவுகளுடன் கூடி அஞ்சலித்தமை மனதிற்கு ஓர் நிம்மதியாகவுள்ளதுடன் இன்னும் 10 வருடம் வாழுவன்போன்ற ஆரோக்கியமும் தெரிகின்றது.
இருப்பினும் அடுத்த ஆண்டிலாவது எனது மகனைப் புதைத்த இடத்தில் அந்த மண்ணை அணைத்து கட்டியழுதால் எனது உயிர் பிரிந்தாலும் சந்தோசமாகச் செல்வேன் என்றார்.
தகவல் - துளியம்