Breaking News

சீருடையில் இருந்த மாணவனைத் தாக்க முயன்றார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன



பாடசாலைச் சீருடையில் இருந்த மாணவன் ஒருவனை, தாக்க முயற்சித்தார் என்று சிறிலங்கா இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் நாள் கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயம் அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ராவய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

க.பொ.த சாதாரணதரத் தேர்வு எழுதும் அந்த மாணவன், கணிதபாட முதல்தாளை் தேர்வை எழுதி விட்டு வரும் போதே, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அந்த மாணவனின் சீருடையில் பிடித்து இழுத்து, அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முயன்றார்.

இன்று தேர்வுகள் முடிந்த பின்னர், மேஜர் ஜெனரலினால் அச்சுறுத்தப்பட்ட மாணவனை அழைத்துச் சென்று மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் காவல்துறையில் முறையிடவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்க செயலர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சில இணையத்தளங்கள் தமக்கு எதிராக அடிப்படையற்ற, பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தாம் ஒருபோதும் மாணவனைத் தாக்கவில்லை என்றும். இராணுவத்தில் இருந்த போது கூட ஒரு வீரரையும் தாக்கியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.