கச்சதீவு புதிய அந்தோனியார் தேவாலய திறப்பு விழா ஒத்திவைப்பு
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவையொட்டி நாளை நடைபெறவிருந்த கச்சதீவு புதிய புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது.
யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பங்குதந்தை வணக்கத்திற்குரிய அன்டனி ஜெயரஞ்சன் அறிவித்துள்ளார்.
நாளைய தினம் நடைபெறவிருந்த திறப்பு விழாவில் வட மாகாண ஆளுநர், ஸ்ரீலங்கா கடற்படையின் கட்டளைத் தளபதி, வட மாகாண கட்டளைத் தளபதி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்துகொள்ள இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த திறப்பு விழாவில் பங்குபற்றுவதற்கு நெடுந்தீவில் இருந்து மாத்திரம் 150 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனிடையே கச்சதீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என ராமேஸ்வரத்தை சேர்ந்த மக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மக்கள் இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்துள்ள நிலையில், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.