கரையை கடக்கிறது நாடா புயல் - கடலூர் அருகே பலத்த காற்று
சென்னைக்கு தென்கிழக்கே வங்க கடல் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புதன்கிழமை புயலாக மாறியது.
‘நாடா’ என பெயர் சூட்டப்பட்ட அந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் சென்னைக்கு தென் கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 520 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது.
அது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால் சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் ‘நாடா’ புயல் நேற்று காலை வலு இழக்க தொடங்கி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. அது மேலும் பலவீனம் அடைந்து கடலூருக்கும் காரைக்காலுக்கும் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கரையை கடந்து வருகிறது.
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது, கடலூர், நாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடற்கரையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது:-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நாடா புயல் மேலும் வலுவிழந்தது. தமிழகம், புதுச்சேரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசுகிறது. கடலூரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனர்கள் கடலூக்குள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.