ஓமந்தை சோதனைச் சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம்
பொது மக்களுக்குச் சொந்தமான ஓமந்தை சோதனைச் சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த காணிக்கு மாற்றீடாக வேறு 6 ஏக்கர் காணியை இராணுவத்தினருக்கு வழங்கவும் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஓமந்தைச் சோதனைச் சாவடி அமைந்திருந்த இறம்பைக்குளம் காணி உரிமையாளர்களுக்கும், மேலதிக அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த 06 ஏக்கர் காணியை இராணுவம் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் எனவும் எஞ்சிய காணியை விடுவிக்க இராணுவம் இணங்கியுள்ளதாகவும் மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் மக்களிடம் தெரிவித்திருந்தார்.
இதனை ஏற்க மறுத்த மக்கள் குறித்த பகுதியில் சுமார் 65 குடும்பங்களுக்கு சொந்தமான காணி உள்ளதாகவும் கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தினர் அதனை தம்வசப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
இராணுவ முகாம் அமைந்துள்ள முழு காணியையும் தமக்கு பெற்றுத்தருமாறும் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா ஆகியோரது கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவர்கள், மக்களுடனும் மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் ஆகியோருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த இறம்பைக்குளம் காணியை முழுமையாக விடுவிக்க இராணுவத்தினர் இணங்கியுள்ளதாகவும், அதற்கு பதிலீடாக 06 ஏக்கர் காணி ஏ9 வீதியில் வழங்கவேண்டும் எனவும் அரசாங்க அதிபரிடம் கோரியிருந்தனர்.
இராணுவத்திற்கு ஏ9 வீதியில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கட்பட்ட வேறு 06 ஏக்கர் காணியை வழங்குவதற்கு அரச அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் மக்களின் காணியை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.