வெடி ஆலையில் பாரிய விபத்து - 10 பேர் பலி: 50 பேரில் நிலை என்ன?
தமிழகத்தின் திருச்சி அருகே துறையூர் பகுதியில் உள்ள வெடி ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்டம் - துறையூர் பகுதியின் தி.முருங்கப்பட்டி என்ற இடத்தில் தனியார் வெடி தொழிற்சாலை உள்ளது. பாறைகளைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிகள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆலைக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 07.00 மணியளவில் வழக்கம்போல் சுமார் 60 தொழிலாளர்கள் பணிக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் தொழிற்சாலைக்குள் சென்ற 10 நிமிடங்களில் பயங்கர வெடிச்சத்தத்துடன் புகைமூட்டம் எழுந்துள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிற்சாலைக்குள் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் பயண தூரம் என்பதால் சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் வருவதற்கு சற்றே தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாகவும் மீட்புப் பணி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது மிகப் பெரிய அளவிலான வெடி விபத்து என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.