சமஷ்டி கேட்டால் சட்டியிலிருந்து தமிழர்கள் அடுப்பில் விழ நேரிடும்!
பிரபாகரனால் இலங்கையில் ஈழத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதேபோல், சம்பந்தனாலும் விக்கியாலும், சிவாஜிலிங்கத்தாலும் சமஷ்டியை ஏற்படுத் தவும் முடியாது. இது வெறும் பகற்கனவு என நல்லாட்சியின் பங்காளிகளின் கட்சியும் பேரினவாதக் கட்சியுமான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. இதற்கு சிங்கள பெளத்தர்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள் என்றும் ஹெல உறுமய குறிப்பிட்டது.
இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி மூலமே தீர்வு தேவை என வலியுறுத்துகிறது. சமஷ்டி ஆசையென்பது இலங்கை பூமியில் ஒரு போதும் நிறைவேறாது. அதற்கு சாத்தியமும் இல்லை. சம்பந்தன், விக்கினேஸ்வரன், சிவாஜிலிங்கம் போன்றோரின் பகற் கனவே சமஷ்டியாகும். இது தொடர்பில் அவர்கள் அனுதினமும் பேசலாம். ஆனால் ஒரு போதும் சாத்தியமாகாது.
இது தொடர்பில் ஜீ.ஜீ.பொன்னம்பலம், செல்வநாயகம் பேசினார்கள். ஆனால் வெற்றி பெறவில்லை. பண்டா –செல்வா ஒப்பந்தம், டட்லி– செல்வா ஒப்பந்தம் நிறைவேறவில்லை. பின்னர் பிரதேச சபைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்திய– இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன. அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன.
முப்பது வருடகால யுத்தம் நடைபெற்றது. இது ஈழ இராச்சியத்தை உருவாக்க பிரபாகரன் முன்னெடுத்தார். ஆனால் தோல்வி கண்டது. இறுதிவரை சமஷ்டி தமிழர்களுக்குக் கிடைக்கவேயில்லை. மலையக தமிழர்களும், முஸ்லிம்களும் சமஷ்டி வழங்குவதை விரும்பமாட்டார்கள்.
புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. சிங்கள பெளத்தர்கள் எதிர்ப்பார்கள். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினாலும் தோல்வியிலேயே முடியும். பாராளுமன்றத்திலும் சமஷ்டி என்பதற்கு ஆதரவு கிடைக்கப் போவதில்லை. எனவே நடைமுறைச் சாத்தியமாகாத சமஷ்டியை பேசிப் பேசியே சம்பந்தனும் தமிழ் தலைவர்களும் காலத்தை கடத்துவார்கள்.
இதனால் தமிழ் மக்களுக்கு எதுவிதமான நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக “சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாக தமிழர்களின் நிலை மாறும்”. சமஷ்டியை பேசி தமிழர்களை நிர்க்கதிக்குள் தள்ளிவிட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முனைகிறது என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.