யாழில் நாடா சூறாவளியின் தாக்கம்: 57 குடும்பங்கள் பாதிப்பு
யாழ்.மாவட்டத்தில் நாடா சூறாவளியின் தாக்கத்தினால் 57 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர நிலை உண்டாகுமானால் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் யாழ்.மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் சூறாவளி காரணமாக சாவகச்சேரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோல் மருதங்கேணி மற்றும், மாதகல் பகுதிகளில் கடலுக்கு சென்றவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை, வலணை ஆகிய பகுதிகளில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவசரகால நிலைமை உண்டாகுமானால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு படையினர் தயாராகவே உள்ள போதிலும், அவசரகால நிலைமை உண்டாகவில்லை என்று கூறப்படுகிறது.
அத்துடன், மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக கடும் குளிரான காலநிலை நீடித்து வருகின்ற நிலையில், மக்களை அவதானமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.