Breaking News

கவிஞர் இன்குலாப் காலமானார்



தமிழீழ விடுதலை ஆதரவாளரும், தமிழ் உணர்வாளரும், பிரபல கவிஞனருமான இன்குலாப் சென்னையில் இன்று காலமானார்.’

உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, கவிஞர் இன்குலாப் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது தீவிர பற்றுக் கொண்டிருந்த கவிஞர் இன்குலாப், ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து எழுதிய கவிதைகள், 1990களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு தொகுப்பாக விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டது.

இந்திய இராணுவத்தினர் ஈழமண்ணில் நிலைகொண்டிருந்த காலத்தில் வெளியிடப்பட்ட ஒலிநாடாவில் இடம்பெற்றிருந்த, “ஒப்புக்குப் போர்த்த அமைதித் திரையில் ஓரங்கள் பற்றி எரிகின்றன” என்ற பிரபலமான பாடலை கவிஞர் இன்குலாப் எழுதியிருந்தார்.

கவிஞர், பேராசிரியர், பொதுவுடமைச் சிந்தனையாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட படைப்பாளியாகத் திகழந்தவர் இன்குலாப். இவரின் இயற்பெயர் சாகுல் அமீது. புரட்சி என்ற பொருள்தரும் இன்குலாப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், போராட்டங்களை மையப்படுத்தியே இவரது படைப்புகள் இருக்கும்.

புதுக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த இன்குலாப் ‘சூரியனைச் சுமப்பவர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ஏராளமான கட்டுரைகள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ‘ஒவ்வொரு புல்லாய்’ எனும் தொகுதியாகவும், கட்டுரைகள் ‘ஆனால்’ எனும் நூலாகவும், நாடகங்கள் ‘குறிஞ்சிப்பாட்டு’, ‘குரல்கள்’ எனும் தொகுதிகளாகவும், கதைகளும் குறுநாவலும் ‘பாலையில் ஒரு சுனை’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன.

ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பதிவு செய்யும் விதமாக ‘மனுசங்கடா… நாங்க மனுசங்கடா’ என்ற மேடைப் பாடலை எழுதினார் கவிஞர் இன்குலாப். அந்தப் பாடல் இன்றளவும் தனித்த கவனத்தைப் பெற்று வருகிறது.

ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த அநீதியைக் கண்டித்து 2006-ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட கலைமாமணி விருதை தமிழக அரசிடமே திருப்பி அளித்தவர் இன்குலாப். சிற்பி இலக்கிய விருது, வைரமுத்து விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.