பொதுச் செயலாளர் பதவிக்கு எம்.ஜி.ஆர் வைத்த ‘செக்’! - சீனியர்களை வளைக்கும் சசிகலா
போயஸ் கார்டனில் கட்சியின் சீனியர்களிடம் தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார் சசிகலா. 'அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்கு எதிரான மனநிலை உள்ளவர்களை சமாதானப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன" என்கின்றனர் அ.தி.மு.க. நிர்வாகிகள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அ.தி.மு.கவில் அதிகாரம் பொருந்திய பொதுச் செயலாளர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார் சசிகலா. இரண்டாவது நாளாக நேற்றும் போயஸ் கார்டனில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். 'தனக்கு எதிராக வரிந்து கட்டுவார்கள்' என அவர் நினைக்கும் சீனியர்களிடம், மன்னார்குடி தரப்பினர் சமாதானப் படலத்தைத் தொடங்கியுள்ளனர். 'முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருக்கும் செங்கோட்டையன் வேறு பக்கம் சாயலாம்' என்ற தகவல்களும் பரவின. இதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்
செங்கோட்டையன். 'கட்சித் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்' என உறுதியாகத் தெரிவித்துவிட்டார். "கார்டனில் அம்மாவுடன் முரண்பட்டு வெளியேறும்போதெல்லாம், சசிகலா தரப்பினரை அ.தி.மு.க.வின் சீனியர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தனர். தற்போது சசிகலாவை பொதுச் செயலாளராகக் கொண்டு வரும் வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. 'இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யலாம்' எனச் சிலர் பேசி வந்தனர். ஆனால், கட்சியின் விதிப்படி இப்படியொரு பதவியை உருவாக்க முடியாது. பொதுக்குழுவில் சசிகலாவை போட்டியின்றி தேர்வு செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு மிக முக்கியக் காரணமே, எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியின் விதிமுறைகள்தான்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
"1973-ம் ஆண்டு அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தொடங்கியபோது, கட்சியின் சட்டவிதிகளில் சில மாற்றங்களைச் செய்தார். மற்ற கட்சிகளில் பொதுக் குழு உறுப்பினர்கள் சேர்ந்து, பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வார்கள். ஆனால், ' தனக்கு எதிராகபொதுக்குழு உறுப்பினர்களை கருணாநிதி விலைக்கு வாங்கிவிடக் கூடாது' என்பதற்காக, 'அ.தி.மு.க உறுப்பினர்களே கட்சியின் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வார்கள்' என சட்ட விதியைக் கொண்டு வந்தார். அன்றிலிருந்து இன்றுவரையில் இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. 1988-ம் ஆண்டு பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு வந்தார்
ஜெயலலிதா. 'கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் அவர்தான்' என கட்சிக்காரர்கள் பேசி வந்தனர். தற்போது டிசம்பர் இறுதிக்குள் பொதுக்குழு கூட்டுவதற்கான முடிவில் இருக்கிறார் சசிகலா. அப்போது பொதுச் செயலாளர் தேர்தலில் வேறு யாராவது போட்டியிட முன்வந்தால், நிலைமை சிக்கலாகிவிடும். அ.தி.மு.க உறுப்பினர்கள் ஒன்று திரண்டு சசிகலாவை தேர்வு செய்வார்களா? என்பதையும் உறுதியாக நம்ப முடியாது. எனவேதான், எதிர்ப்பாளர்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான உறுதிமொழிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டியே, சசிகலா குறித்த நேர்மறையான பிம்பத்தை உருவாக்கும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன" என்றார் விரிவாக.
"அ.தி.மு.கவின் முழுக் கட்டுப்பாடும் சசிகலா கைகளில் சென்றுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு முனைப்போடு இருக்கிறது. எனவே, 'ஆட்சியிலும் கட்சியிலும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது மக்கள் மத்தியில் எதிர்மறையான விளைவை உருவாக்கும். தம்பிதுரையை முன்னிறுத்துங்கள்' என அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு ஆதரவாக, எதிர்க்கட்சிகளில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்கள் பரப்பப்படுவது குறித்து, பிரதமரின் கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றுள்ளனர்.
அவர்கள், 'சசிகலாவின் பின்னணியில் காங்கிரஸ் உள்பட தமிழ்த் தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. நாம் கவனமாகச் செயல்பட வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். 'நாம் சொல்வதைக் கேட்டுச் செயல்படுகிறார் ஓ.பி.எஸ். ஐந்து ஆண்டுகளாக ஜெயலலிதாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு அவர் ஒப்புதல் கொடுத்துவிட்டார். அவருடைய தலைமையின்கீழ் கட்சி வந்தாலும் நல்லதுதான்' என பா.ஜ.க தலைமையிடம் பேசியுள்ளனர்.
இதையடுத்து, ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களையெல்லாம், வருமான வரித்துறை ரெய்டின் மூலம் வழிக்குக் கொண்டு வரும் வேலைகளும் தொடங்கிவிட்டன. 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஓ.பி.எஸ் வசமிருந்த பொதுப் பணித்துறை எடப்பாடியின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது எடப்பாடியை மையமிட்டுத்தான். எடப்பாடியின் உறவினர்கள் வீடுகளில் ரெய்டு, சேகர் ரெட்டியிடம் 130 கோடி பறிமுதல் என சசிகலா விசுவாசிகளை நோக்கியே மத்திய அரசின் கரங்கள் நீள்கின்றன" என்கிறார் போயஸ் கார்டன் நிலவரத்தைக் கவனித்து வரும் கட்சி நிர்வாகி ஒருவர்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதே சூழ்நிலை, 28 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. ‘ஜெயலலிதாவைப் போல் தடைகளைத் தகர்த்தெறியும் ஆற்றல் பெற்றவர்கள் இருக்கிறார்களா?' என்ற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் எழாமல் இல்லை.
-ஆ.விஜயானந்த்