அரச காணிகளையும் சுவீகரிக்கும் முயற்சியில் பாதுபாப்புப் படை; சி.வி குற்றச்சாட்டு
வடக்கில் பெருமளவிலான காணிகள் தம்வசம் வைத்துள்ள நிலையில், அரச காணிகளையும் சட்டரீதியாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளை இராணுவம் திரைமறைவில் முனனெடுத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
வடமாகாண சபையின் அடுத்து வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தின் முதலமைச்சரின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணி ஆணையாளர் திணைக்களத்தினூடாக அரச காணிகள் தொடர்பில் ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலேயே கட்டுப்பாடுகளை விதிக்க முடிந்ததாகவும், பிரதேச மட்டத்தில் மாகாண அலுவலர்கள், பிரதேச செயலாளர்களின் கீழ் பணியாற்றி வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார.
எனினும் பல்வேறு தேவைகளின் பொருட்டு சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மக்கள் நலன் கருதும் வகையிலேயே கையாளப்படுவதாகவும், காணி தொடர்பான விடயங்களை கையாளுதல், சவால்மிகுந்த ஒன்றாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச காணிகள் மட்டுமல்லாமல் , பெருமளவிலான தனியார் காணிகளும், படையினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, அவற்றை விடுவித்துக் கொள்ள முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலையீடுகளினால் வட மாகாண சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்படாமல் பெருமளவிலான அரசகாணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பில்ம் மத்திய அரசிற்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், 2017 ஆம் ஆண்டிற்காக 85.126 மில்லியன் ரூபா மீண்டுவரும் செலவிற்கும் பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ஒரு மில்லியனும் ரூபாவும், மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைக்கு ரூபா 4 மில்லியனும் மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிதியின் மூலம் காணி தொடர்பான இலத்திரனியல் தகவல் முகாமைத்துவ முறைமை தரவுத் தளத்திற்கு வேண்டிய கணனி உபகரணங்கள், மாவட்ட அலுவலகங்களுக்குத் தேவையான நிழற்பிரதி இயந்திரங்கள், அரச காணிகளில் மரங்களை நாட்டுவதற்கான திட்டங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.