Breaking News

அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து நாடாளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்



புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரான லக்ஸ்மன் கிரியெல்ல, சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், “அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான யோசனைகளைத் தயாரிக்க அமைக்கப்பட்ட ஆறு உப குழுக்களின் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் தொடக்கம் 11ஆம் நாள் வரை மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது.

சிறிலங்காவில் அரசியலமைப்பு மாற்ற செயல்முறைகள் ஊடகங்களின் முன்பாக நடப்பது இதுவே முதல்முறை. முன்னர், ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இம்முறை என்ன நடக்கிறது என்பதை பொதுமக்களால் காண முடியும்.

நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள விவாதத்தின் பின்னர், புதிய அரசியலமைப்பை வரையும் நடவடிக்கைகள் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.