Breaking News

மீனவர் விவகாரம் குறித்து - தமிழக முதல்வர் கடிதம்

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த இலங்கை உயர் அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடத்தி இந்திய மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 


இதுதொடர்பாக அவர் இந்திய பிரமதர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:- 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக இரு விசைப் படகுகளில் சனிக்கிழமை கடலுக்குச் சென்ற 8 தமிழக மீனவர்கள், அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் இலங்கை கடற்படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். 

இதனால், அவர்கள் மீன் பிடிக்காமல் உடனடியாகக் கரைக்குத் திரும்பி, புதுக்கோட்டை மணமேல்குடியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். 

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். இருந்தபோதும், மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. 

இதுதொடர்பாக இலங்கை அரசுடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்திய மத்திய அரசு, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் இனி இருக்காது என்று அறிவித்தப் பின்னரும், அவர்களின் தாக்குதல் தொடர்கிறது. 

மீனவர்கள் மீதான இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த கச்சத் தீவை இந்தியா மீட்பதும், அதுதொடர்பான 1974-ஆம் ஒப்பந்தத்தை ரத்து செய்வதுமே நிரந்தரத் தீர்வாக அமையும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தினார். 

மேலும், இந்த ஒப்பந்தம் மூலமாக சர்வதேசக் கடல் எல்லையை இலங்கைக்கு மத்திய அரசு நிர்ணயித்துக் கொடுத்துவிட்டதாகக் கருத முடியாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. இலங்கைக் கடற்படையினரால் கடந்த நவம்பர் 19ம் திகதி கைதுசெய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுடன் மொத்தம் 15 மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

எனவே, இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், மீனவர்களின் வாழ்வாதரத்தைப் பாதிக்கக்கூடிய இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், இலங்கை அரசு பிடித்து வைத்திருக்கும் தமிழக மீனவர்களின் 107 மீன்பிடி படகுகளையும் தாமதமின்றி உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.