Breaking News

ஊடகவியலாளரை தாக்கிய கடற்படைத் தளபதி

நேற்றைய தினம் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனமீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களால் ஜப்பானியக் கப்பலொன்று பணயமாக பிடித்துவைத்திருக்கப்பட்டது. இதனை மீட்பதற்கு சிறீலங்கா கடற்படையினரால் அதிரடி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடற்படைப் படகு ஒன்றில் சாதாரண உடையில் வந்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, தொழிலாளர்களைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரைப் படமெடுத்துக்கொண்டிருந்த ஊடகவியலாளரை தள்ளிவிட்டு அச்சுறுத்தினார்.

தான் ஊடகவியலாளர் எனத் தெரியப்படுத்தியபோதும், அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டிய கடற்படைத் தளபதி, அங்கிருந்த ஏனைய ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா படைத் தளபதி ஒருவர், ஊடகவியலாளருக்கு எதிராக பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த முதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.

அதேவேளை, ஊடகவியலாளரை கடற்படைத் தளபதி அச்சுறுத்தினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையிடம் விளக்கம் கோரியுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியராச்சி தெரிவித்தார்.