காணாமல் போனோரின் உறவுகள் அமைதி பேரணி
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோரின் உறவுகள் இன்று(10) வவுனியாவில் அமைதி பேரணி ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியா கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பித்து வவுனியா பசார் வீதி வழியாக அமைதியாக சென்று சுவர்க்கா விருந்தினர் விடுதியை அடைந்தது.
காணாமல் போனவர்களின் உறவுகள் தமது உறவுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அடுத்த கட்டம் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ' எமது பிள்ளைகள் எங்கே? , நல்லாட்சி அரசே எமது பிள்ளைகளுக்கு பதில் சொல், எம்மை ஏமாற்றாதே, மனித உரிமைகளுக்கு மதிப்புக் கொடு' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.