எலியைப் போல அமைதியாக இருக்கிறது இந்தியா – மகிந்த
சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா எலியைப் போல அமைதியாக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீன நீர்மூழ்கிகள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்த போது, இந்திய நண்பர்கள் எல்லோருமே எனக்கு எதிராக குரல் எழுப்பினர். ஆனால் இப்போது அவர்கள் எலியைப் போல அமைதியாக இருக்கின்றனர்.
அப்போது அவர்கள் வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்தனர்.
திருகோணமலை, காங்கேசன்துறை துறைமுகங்கள் அல்லது பலாலி விமான நிலையத்தை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தம்மிடம் தரும் என்று எதிர்பார்த்து, இந்தியா இப்போது மௌனமாக இருக்கக்கூடும்.
இந்தியாவுடன் எட்கா உடன்பாடு செய்து கொள்ளக் கூடாது. இந்த உடன்பாட்டை செய்து கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுக்கிறார்.
ஆனால் இந்தியா இதனைச் செய்து கொள்ளக் கூடாது. இந்த விடயத்தில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் மக்கள் எதிராக இருக்கும் போது, இந்த உடன்பாட்டை செய்து கொள்வது இந்தியாவுக்கும் நல்லதல்ல. எமக்கும் நல்லதல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.