மண்ணுக்காக போராடிய நாமே இன்று மண்ணை கொலை செய்கிறோம்: ஐங்கரநேசன்
மண்ணுக்காகப் போராடிய நாமே இன்று அளவுக்கு அதிகமான விவசாய இரசாயனங்கள் மூலம் மண்ணை கொலை செய்து வருவதாக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் உலக மண்தினத்தை முன்னிட்டு நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற ‘மண்ணும் அவரையங்களும் – உயிர் வாழ்வதற்கான ஒரு கூட்டு’ என்ற கருப்பொருளிலான கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘மண் குறித்து அதிகம் சிந்திக்காத நாம் இந்த மண் நாளுக்குநாள் வளம் இழந்து செல்வதில் அக்கறைப்படுவதுமில்லை. உலகின் உயிர்ப் பல்வகைமையில் நான்கில் ஒரு பங்கு உயிரினங்கள் மண்ணுக்குள்ளேதான் வாழ்கின்றன.
ஆனால் அளவுக்கு அதிகமான விவசாய இராசயனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் இந்த மண் உயிரினங்களைச் சாகடித்துவிடுகின்றோம்.பக்ரீறியாக்களும் பங்கசுக்களும் இல்லாத மண்ணில் இரசாயன உரங்களை பயன்படுத்துவதன்மூலம் பயிர்கள் செழிப்பாக வளராது என்பதை நாம் உணர வேண்டும்.
எமது விவசாயிகளில் பெரும்பாலானோர் இப்போது ஒரு போகத்துடன் பயிர்ச்செய்கையை மட்டுப்படுத்தி விடுகிறார்கள். அவரை இனத்தாவரங்களை இடைப்பட்ட போகங்களில் சுழற்சியாகப் பயிரிடும் முறைமைக்கு விவசாயிகள் மீளவும் திரும்ப வேண்டும். உற்பத்திகளை அதிகரிக்கச் செய்வதற்கு மாத்திரம் அல்ல காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்கும் மண்வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.
இவர் தவிர, மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், யாழ் பல்கலைக்கழக பயிரியல்துறையின் தலைவர் கலாநிதி சிவமதி சிவச்சந்திரன், புவியியற்துறையின் முன்னாள் தலைவர் எஸ்.ரி.பி. இராஜேஸ்வரன், உலக உணவு நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் க.பத்மநாதன், மத்திய விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர்;, திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர்;, மாகாண விவசாயப் பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் என பலரும்; கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.