தண்ணிமுறிப்பு குள மீன்பிடி சர்ச்சை:தமிழ், முஸ்லீம் மீனவருக்கே உரிமை
முல்லைத்தீவு தண்ணிமுறிப்புக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் உரிமை தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களுக்கு மாத்திரமே உரித்தானது எனவும் இதனை மீறி வேறு எவரும் குளத்தில் இறங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றிருந்தது.
இதில் கலந்துகொண்டிருந்த சிங்கள மீனவர்கள், தண்ணிமுறிப்புக் குளத்தில் மீன்பிடிப்பதற்குத் தமக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்தக் குளத்தில் நிரந்தரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ், முஸ்லிம் மீனவர்கள் இதனை எதிர்ப்பை வெளியிட்டனர்.
மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் முத்தரப்பு மீனவப் பிரதிநிதிகள் கலந்துரையாடி இதற்குத் தீர்வை எட்டுமாறு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையிலேயே முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில், தண்ணி முறிப்புக் குளத்தில் இதுவரை காலமும் மீன்பிடியில் ஈடுபட்ட சங்கங்களைச் சேர்ந்தவர்களான தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் மாத்திரமே தொடர்ந்தும் தொழிலில் ஈடுபட முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக தற்போது அனுமதி கோருவோர் தண்ணிமுறிப்பு குளத்தில் தொழிலில் ஈடுபட முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில், 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி நீதவான் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கருத்தில் கொண்டே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தீர்மானத்தினை அசட்டை செய்தாலோ அல்லது அத்துமீறினாலோ, அவர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.