முஸ்லிம்களை அரேபியாவுக்குச் செல்ல பொதிகளைக் கட்டுமாறு ஞானசாரதேரர் எச்சரிக்கை!
சிறீலங்காவிலுள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து கள்ளப் படகுகளில் வந்தவர்கள் என சாடிய பொதுபல சேனாக் கட்சியின் பொதுச் செயலர் ஞானசாரதேரர், நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை பொதிகளைக் கட்டி அரேபியா நாட்டுக்குச் செல்வதற்குத் தயாராகுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் அரசியலமைப்புச் சட்டமொன்று இருக்கையில் ஏன் முஸ்லிம்கள் குவாசி சட்டத்தைக் கோருகின்றனர்? இது பிழை அபிவிருத்தி அடையும் நாட்டில் ஒரு சட்டமே இருக்கவேண்டும். சரியாச் சட்டம் வேண்டுமென்றால் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களது பொதிகளைக் கட்டி அரேபியா நாட்டுக்குச் செல்லுங்கள் எனத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபலசேனா கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தாம் மட்டக்களப்பு சுமனரத்ன தேரரின் சுகநலங்களை விசாரிப்பதற்காகச் சென்றதாகவும், தங்களை சிறீலங்காக் காவல்துறையினர் இடையில் தடுத்து நிறுத்தியதாகவும், காவல்துறையினரின் நடவடிக்கைக்கெதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு நோக்கிய எமது பணயத்தில் பொலனறுவையை கடந்த பின்னர் வழமைபோல நல்லாட்சி அரசாங்கத்தின் காவல்துறையினர் இரண்டு நீதிமன்றங்களினால் விடுக்கப்பட்ட தடை உத்தரவுகளை கொண்டுவந்து நீட்டினார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்யத்தடை, வீதிகளை மறிக்கக்கூடாது, ஏதோ ஓர் இடத்திற்குள் நுழையத் தடை போன்ற உத்தரவுகள் இருந்தன.
ஆனால் இந்த இடம் தூத்துக்குடியிலா இருக்கின்றது என்பதை நீதிமன்ற தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. சில இனவாத குழுக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் எமது பயணத்தை தடைசெய்ய முயற்சித்திருக்கின்றன.
வெகுவிரைவில் சிங்கள மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி அதனை சர்வதேச அரங்கிற்குக் கொண்டுசெல்லவே இவ்வாறான நாடகத்தை அவர்கள் செய்கின்றனர். இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் எங்கு சென்று நிலங்களைத் தொடவும், நடக்கவும் உரிமை உள்ளது. ஆனால் அதற்கும் இடமளிக்காத காவல்துறையினர் யாரோ சிலரது உத்தரவைப் பெற்று எமது பயணத்தை தடுத்து வீதியை மறித்தனர். இந்த நாட்டிலுள்ள காவல்துறையினரின் தடிகள் சிங்கள மக்களைப் பார்த்தவுடன்தான் மேலெழும்புகிறது. ஆனால் இனவாதக் குழுக்களைப் பார்த்தாலும் காவல்துறையினரின் தடிகள் மேலெழும்புவதில்லை.
வடக்கில் தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை வைத்து மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்தனர். தமிழ் சமூகத்தை பின்வாங்கச் செய்தது விடுதலைப் புலிகளே என்றாலும் முட்டாள் தமிழ் மக்களுக்கு இன்னும் அது புரியவில்லை. இதனை கண்டுகொள்ளாத புலனாய்வுப் பிரிவு சிங்களவர்கள் சிறிய ஏதாவது ஒன்றை செய்தால் தடியை உயர்த்துகின்றது. எனவே எமது உரிமையை தடுத்த காவல்துறையினருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார்.