ஜனாதிபதி எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்.வருகிறார்
யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒழுமைக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்கள் பலரும் இந்தப் பயணத்தில் இணையவுள்ளனர்.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து 2017 ஆம் ஆண்டில் முதற்கட்ட காணி விடுவிப்பு தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் பழைய பூங்கா வளாகத்திற்குள் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நாட்டில் முதல்முறையாக ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் அமையவுள்ள வடமாகாண மக்கள் குறைகேள் மையத்தை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து யாழ்ப்பாணம் கோட்டையில் இடம்பெறவுள்ள மரநடுகை நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு மரங்களை ஜனாதிபதி நாட்டி வைக்கவுள்ளனர்.
இதன்பின்னர் வலி.வடக்கு செல்லும் ஜனாதிபதி இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளார். இந்நிகழ்வு பலாலி வடக்கில் இடம்பெறவுள்ளது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்படும் 136 வீடுகளும் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவு வளலாயில் அமைக்கப்படும் 101 வீடுகளும் இதன்போது பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வின் போது வலி.வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் மேலும் சில ஏக்கர் காணிகள் விடுவிப்பு தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வுகளிற்கான முன் ஏற்பாடுகள் யாழ்.மாவட்ட செயலகத்தின் ஊடாக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.