சம்பந்தன் ஜனநாயகவாதி என்பதை உறுதிப்படுத்துகிறார் ; ஜே.வி.பி.
அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு கருத்துக்களை முன்வைத்த போதிலும்
உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூறுவது ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயகவிடம் அதிகாரப்பகிர்வு மற்றும் ஆளுநர் நீக்கம் தொடர்பில் கூட்டமைப்பின் கருத்து தொடர்பில் ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.
அதிகார பரவலாக்கல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பு பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் முக்கியமான ஒரு காரணியை முன்வைத்துள்ளது. அதாவது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் இருக்கவில்லை. வடக்கு கிழக்கின் சர்வஜன வாக்கெடுப்பை பற்றி மட்டுமே முன்னர் பேசினார்கள். ஆனால் இப்போது முழு நாட்டின் பூரான ஒத்துழைப்புடன் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதை தெரிவித்துள்ளார். ஆகவே எத்ரிக்கட்சி தலைவர் ஜனநாயகவாதி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுகின்றார் என்றார்.