Breaking News

கருணா குழுவுக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தில் சுடப்பட்டார் ரவிராஜ்



யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் லக்ஷ்மன் ஆகியோரின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டது என நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ரி-56 ரக துப்பாக்கியானது இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியத்தினூடாக இராணுவ புலனாய்வு படையணிக்கு வழங்கப்பட்டு அங்கிருந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மூன்றாம் இராணுவப் புலனாய்வு கட்டளை மையத்தினூடாக கருணா குழுவுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கு நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலகவின் மேற்பார்வையில் விசேட ஜுரிகள் சபை முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இராணுவத் தளபதி சார்பில் நேற்று மன்றில் முன்னிலையாகியிருந்த இராணுவ நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயளந்த குணவர்தன மற்றும் இராணுவப் பலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் லியனகே ஆகியோரின் சாட்சியம் ஊடாக இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கியுடன் சுமார் 150 வரையிலான துப்பாக்கிகளும், யுத்த உபகரணங்களும் இவ்வாறு கருணா குழுவினருக்கும் இராணுவத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட குழுக்களுக்கும் வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி குறித்த ஆயுதமும், மேலும் ஒருதொகை ஆயுதங்களும் இராணுவப் புலனாய்வுப் படையணிக்கு விநியோகம் செய்யப்பட்டதாகவும், உளவுத் தகவல்களை சேகரித்து தாக்குதலுக்குத் தேவையான பொறிமுறையை வழங்கும் நோக்கிலேயே இதனை செய்திருப்பதாகவும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

எனினும் மூன்றாவது புலனாய்வுக் கட்டளை மையத்திலிருந்து செயற்பட்ட நட்புக் குழுக்களுக்கு வவிநியோகிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எந்தவித ஆவணங்களும் தரவுப்படுத்தப்படவில்லை என்று சாட்சியாளர்கள் மன்றில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடிப்பதற்கான ஓரங்கமாக ரி-56 ரக துப்பாக்கியையும், வேறுசில ஆயுதங்களையும் கருணா குழுவுக்கு வழங்கியதை இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரலுமான லியனகே நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.

இந்த சாட்சியத்துடன் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரின் சாட்சியத்தை பதிவுசெய்த நீதிமன்றம், முறைப்பாட்டாளர் தரப்பு விசாரணைகளை நிறைவுக்கு கொண்டுவந்தது.

இந்த வழக்கில் பிரதிவாதி தரப்பிலான சாட்சியப்பதிவுகள் உட்பட மேலதிக விசாரணைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.